Friday, November 21, 2014

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் 10 கிராமங்கள்

கிராமங்கள் என்றாலே ஆங்காங்கே குப்பைகள், சாக்கடைகள், சுகாதாரமின்மை, வறுமை, கல்வியறிவின்மை நிறைந்திருக்கும் என்ற எண்ணம், நம்நாட்டு மக்கள் மத்தியில் உள்ளது. அது, தவறு என்பதை நிரூபிக்கும் வகையில், நம்நாட்டில், 10 கிராமங்கள், 10 விதத்தில் சிறப்பிடம் பிடித்துள்ளன. நம்புங்க... இந்த கிராமங்களும், நம்ம இந்தியாவில் தான் இருக்கின்றன.
1. ஆசியாவின் சுத்தமான கிராமம்:

மேகாலயா மாநிலத்தில் உள்ளது மாவ்லின்னாங். 'டிஸ்கவர் இண்டியா' என்ற பத்திரிகை, 'ஆசியாவின் சுத்தமான கிராமம்' என, விருது வழங்கி உள்ளது. ஷில்லாங்கில் இருந்து, 70 கி.மீ., தூரத்தில், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தில், சிகரெட், பீடி துண்டு, பிளாஸ்டிக் பைகள் உட்பட, குப்பைகள் எதையும் பார்க்க முடியாது. ஓவியத்தில் இடம் பெறும் இயற்கை காட்சிகள் போல, கிராமத்தின் வீடுகளும், தெருக்களும் பளிச்சென தோற்றம் அளிக்கின்றன. 'சுத்தம் சுகம் தரும்' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு உள்ள கிராமம் இது.
2. என்ன வசதி இங்கு இல்லை?

நகரங்களில் தான், வை - பை வசதி, கண்காணிப்பு கேமராக்கள், 'ஏசி' வகுப்பறைகள் எல்லாம் இருக்கும் என, நாம் நம்பி வருகிறோம். ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள புன்சாரி கிராமத்தில், இந்த வசதிகள் எல்லாமே உள்ளன. மினி பஸ்வசதி உட்பட, பல்வேறு வசதிகளும் இங்கு உண்டு. ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்தவர் கொடுத்த நிதியில், இந்த வசதி எல்லாம் செய்யப்படவில்லை. மத்திய அரசு மற்றும் கிராமத்தினரின் சொந்த நிதியில், இந்த வசதிகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன. நம்புங்க, இது நம் நாட்டில் உள்ள கிராமம் தான்.
3. கோடீஸ்வரர்கள் கிராமம்:

மகாராஷ்டிராவின் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமம், ஹிவாரே பஜார். நாட்டிலேயே பணக்கார கிராமம் என்றால் இது தான். 60க்கும் மேற்பட்ட கோடீஸ்வர்கள் உள்ளனர். 1995ல், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தினர் இங்கு, 168 பேர் இருந்தனர். தற்போது, மூன்று குடும்பத்தினர் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர். விரைவில் ஏழைகள் இல்லாத முழு கோடீஸ்வர கிராமமாகவும் மாற உள்ளது. இப்படி, ஒவ்வொரு கிராமமும் மாறினால்...
4. 30 ஆண்டு இருளுக்கு கொடுக்கப்பட்ட ஓய்வு:

பீகாரில், 30 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் மூழ்கிக் கிடந்த தர்னாய் கிராமம், தற்போது சூரியசக்தி மூலம் மின்சாரம் பெற்று ஒளிர்கிறது. தங்களுக்கு தேவையான மின்சாரத்தை, தாங்களே உற்பத்தி செய்யும் கிராமம் என்ற பெயரெடுத்துள்ளது. ஆரம்பத்தில் இங்குள்ள மாணவர்கள், பகலில் மட்டுமே பாடம் படித்தனர். பெண்கள், இரவில் வீட்டை வீட்டு செல்வதையும் தவிர்த்தனர். இப்போது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நகரங்களில் ஆட்சியாளர்களால் சாதிக்க முடியாததை, 2,400 குடும்பத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தினர் சாதித்துள்ளனர். முயற்சி திருவினையாக்கும் என்பது இதுதானோ.
5. பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு:

அரியானாவில், நீலம் என்ற பெண்ணை, கிராமத் தலைவராக கொண்டுள்ள கிராமம், சாப்பர். பெண்கள் பிறப்பு வீதத்தில், அரியானா மாநிலம் ரொம்ப, 'வீக்'. ஆனால், சாப்பர் கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால், வீட்டுக்கு வீடு இனிப்பு வழங்கப்படும். பெண் சிசுவை கருவிலேயே அழிப்பது, பல பகுதிகளில் தொடரும் நிலையில், பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் அளவுக்கு மக்கள் மேம்பட்டுள்ளனர் என்றால், அது வியப்பான ஒன்றே. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பது பழமொழி. அது, இந்த கிராமத்திற்குத் தான் பொருந்தும் போலும்.
6. பறவைகளை நேசிக்கும் கிராமவாசிகள்:

கர்நாடக மாநிலத்தில் சிறிய கிராமம், காக்ரிபெல்லூர். பறவைகள் எல்லாம், தொந்தரவான விஷயம். அவற்றின் இரைச்சலை தாங்க முடியாது என, பெரும்பாலானவர்கள் கூறும் நிலையில், காக்ரிபெல்லம் கிராமத்தினர், அரிய வகை பறவைகளை நேசிப்பதோடு, அவை வசிக்கவும் தேவையான வசதிகளை செய்துள்ளனர். அதனால், இந்த கிராமத்தை சுற்றிலும், எப்போதும் பறவைகளின் கிரீச்... கிரீச்... ஒலிதான். பறவைகளை நேசிக்கும் இக்கிராமத்தினர், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுவல்லவோ மனிதாபிமானம்.
7. விஷத்தை முறியடிக்கும் கிராமத்தினர்:

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது, பாலியா கிராமம். கிராம மக்கள் எளிதில் தண்ணீர் பெறுவதற்காக, அரசு சார்பில் போட்ட கைப்பம்புகளில் வரும் தண்ணீரில் அமிலக் கலப்பு இருப்பது தெரியவந்தது. பிரச்னையை அறிந்த கிராமத்தினர், அதை தீர்க்க அரசின் உதவியை நாடாமல், தாங்களே களத்தில் இறங்கினர். தங்களின் பழைய கிணறுகளையே தூர்வாரி பயன்படுத்தத் துவங்கினர். இப்போது, ரசாயன கலப்பில்லாத தண்ணீரை உபயோகித்து மகிழ்கின்றனர். முயற்சித்தால் முடியாதது உண்டா என்ன?
8. 100 சதவீதம் படித்தவர்கள்:

கேரள மாநிலத்தில் உள்ள பொத்தானிக்காடு கிராமத்தில் உள்ள அனைவரும் படித்தவர்களே. நாட்டிலேயே, 100 சதவீத எழுத்தறிவை எட்டிய, முதல் கிராமம் இதுதான். பொத்தானிக்காட்டில், உயர் நிலைப்பள்ளி ஒன்றும், ஆரம்பப்பள்ளி ஒன்றும், தனியார் பள்ளி ஒன்றும் செயல்படுகிறது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, கிராம மக்களின் எண்ணிக்கை, 17 ஆயிரத்து 563. இவர்கள் அனைவரும் படித்தவர்களே.
9. 'குட் மார்னிங்' மூலம் மலம் கழிப்புக்கு 'குட்பை':


கர்நாடகா மாநிலத்தில், பெக்கினாகேரி என்ற கிராமத்தினர், பொது இடம் ஒன்றில் மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவ்வாறு செய்ய வேண்டாம் என, கிராம கவுன்சில் கேட்டுக் கொண்டும், அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த கிராம கவுன்சில் உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும், கிராமத்தினர் மலம் கழிக்கும் அந்த பொது இடத்தில், அதிகாலையிலேயே போய் நின்று கொள்வர். மலம் கழிக்க வரும் ஒவ்வொருவரையும் பார்த்து, 'குட் மார்னிங்' சொல்வர். தர்ம சங்கடத்திற்கு ஆளாகும் அவர்கள், மலம் கழிக்காமல் வீட்டிற்கு சென்று விடுவர். இதனால், கிராம பொது இடத்தில் மலம் கழிப்பது படிப்படியாக நின்று, தற்போது கிராமமே மாறிவிட்டது. இப்போ, கிராம கவுன்சில் உறுப்பினர்கள், 'குட் மார்னிங்'கிற்கு குட்பை சொல்லி விட்டனர்.
10. வீட்டில் கதவுகள் இல்லாத கிராமம்:
மகாராஷ்டிரா மாநிலத்தில், ஷானி ஷிங்னாபூர் என்ற கிராமம் தான், நாட்டிலேயே பாதுகாப்பான கிராமமாக கருதப்படுகிறது. இங்குள்ள வீடுகளுக்கு கதவுகள் இல்லை. அத்துடன் போலீஸ் நிலையமும் இங்கு இல்லை. இந்த கிராமத்தில், திருட்டு என்பதே கிடையாது. ஷானி ஷிங்னாபூர் கிராமம், மற்றொரு வகையிலும் சாதனை படைத்துள்ளது. ஆம், இங்குள்ள வங்கி கிளையில், லாக்கரே கிடையாது. இந்த கிராமத்தை பற்றிய செய்தியும், ஒரு போதும் பத்திரிகைகளில் வந்ததில்லை. நல்லது தான். ஆனால், திருஷ்டிபடாமல் இருந்தால் சரி தான்.

(நன்றி : தின மலர் )