Wednesday, July 25, 2012

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை...?



கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசை தான். அது சிலருக்கு எளிதாகவும், அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.

* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை...? 

* கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன..?

* குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி..?

* குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன..?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....?
1. வருமானம்.
2. ஒத்துழைப்பு.
3. மனித நேயம்.
4. பொழுதுபோக்கு.
5. ரசனை.
6. ஆரோக்கியம்.
7. மனப்பக்குவம்.
8. சேமிப்பு.
9. கூட்டு முயற்சி.
10.குழந்தைகள்.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய 
முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் 
கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் 
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க 
கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...? 

1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.
8. அதிகாரம் பண்ணக்கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக்கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் 
கொள்ளக்கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் 
செய்ய வேண்டும்.
26. குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக 
வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் 
விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.

Friday, July 13, 2012

நான் ரசித்த சில சிலேடைகள்

சிலேடை என்றால் என்ன ?   
ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை எனப்படும். மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று. செய்யுள்களிலும், உரை நடையிலும், மேடைப் பேச்சுக்களிலும், சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச் சிலேடையாகப் பேசுவதுண்டு. தமிழிலும் பல பிற மொழிகளிலும் சிலேடைப் பயன்பாடு காணப்படுகின்றது.


தொடர்ச் சொல் பலபொருள் வெளிப்படுத்தும் விதத்தின் அடிப்படையில், சிலேடை இரண்டு வகைப்படும். அவை,
  1. செம்மொழிச் சிலேடை
  2. பிரிமொழிச் சிலேடை
என்பனவாகும். 
செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து கொண்டே பலபொருள் தருவதாகும்.
ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.)

நான் ரசித்த சில சிலேடைகள்
1. திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும்.

அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.

“அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்."

அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் common(காமன்)" என்றார்.


2. விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்.
ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது.

“அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்"


3. தமிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது “இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார்: ‘இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்'

4. தமிழறிஞர் கி.வா.ஜவின் சிலேடைகள் பிரபலமானவை.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.

“ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ.


கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. 
கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

5. ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித்தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர்.
 “உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே" என்று அவர்கள் கேட்டதற்கு, டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து" என்றார்.

6. அதிவீரராம பாண்டியனும் வரதுங்கப் பாண்டியனும் சகோதரர்கள். இருவரும் புலவர்கள். புரவலர்கள். அவர்களைப் பற்றிப் பாடிய ஒரு புலவர் அவர்களை “அண்டம் காக்கைக்கு ஜனித்தவர்கள்“ என்று பாடினார். வரதுங்கப் பாண்டியனுக்கு ஒரே கோபம். அவர் சற்றே கருநிறம் படைத்தவர். அதனால் தான் அப்படிப் பாடினார் என எண்ணி கோபம் அடைந்தார்.
புலவர் சொன்னார், “ நீங்கள் இருவரும் உலகத்தைக் காக்கவே பிறந்தவர்கள்" அதனால் தான் “அண்டம் காக்க ஜனித்தவர்கள் எனப் பாடினேன்" என்று.


7. ‘பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை பாரதி சின்னப்பயல் என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை.

"காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்"
என்று பாடினார்.

பாரதி என்பதை பார் அதி என்று பதம்பிரித்து காந்திமதிநாதனை வெட்கும்படிச் செய்தார் பாரதி.