Friday, April 22, 2011

கீழ்வானில் சிவந்து மறைந்தான் ஆதவன்


கீழ்வானில் சிவந்து மறைந்தான் ஆதவன்
ஆதவன் உதித்தால் பொழுது விடியும்

பொழுது விடிந்தால் வீட்டில் கல்யாணம்
கல்யாண வீட்டில் ஒரே கும்மாளம்

கும்மாளம் கூச்சலுக்கு இடையில் மணப்பெண்
மணப்பெண் கண்ணில் ஏனிந்த கண்ணீர்?

கண்ணீருக்கு காரணம் முன்னாள் காதலன்
காதலன் அவளுக்கு எழுதிய கடிதம்

கடிதத்தில் அவன் வைத்த கேள்வி
கேள்விமுறை இல்லையா காதலிக்க?

காதலிக்க ஒருவன் கைப்பிடிக்க ஒருவனா?
ஒருவனுக்கு ஒருத்தி மறந்து போனதா?
மறந்துபோன காதல் மீண்டும் வராதா?"

மீண்டு வராத துக்கத்தில் அவள்
அவள் மனதில் பெரும் குழப்பம்
குழப்பம் தீராதபோது வந்தார் தந்தை
தந்தையின் முகத்தில் பெரும் கவலை
கவலையின் காரணம் மணமகன் வீட்டார்
மணமகன் வீட்டார் கேட்ட வரதட்சணை
வரதட்சணைக்கு வழி இல்லை இப்போது
இப்போது என்செய்வது என்றார் தந்தை
தந்தை சொல்கேட்டதும் தீர்ந்தது குழப்பம்
குழப்பம் இல்லை தந்தையே எனக்கு

எனக்கு வேண்டாம் இந்த மணமகன்
மணமகனாக விருப்பம் என் காதலனுக்கு

காதலனுக்கு சிறிதும் வேண்டாம் வரதட்சணை
வரதட்சணையில்லாத் திருமணம் தந்தைக்கு சம்மதம்

தந்தை சம்மதத்துடன் விடிந்தால் கல்யாணம்
கல்யாணப்பெண் நோக்கினாள் கீழ்வானை
கீழ்வானில் சிவந்து மறைந்தான் ஆதவன்
ஆதவன் உதித்தால் பொழுது விடியும்

பொழுது விடிந்தால் வீட்டில் கல்யாணம்
கல்யாண வீட்டில் ஒரே கும்மாளம்

No comments:

Post a Comment